சனி, 4 பிப்ரவரி, 2012

கரு நாகத்தின் பழக்கவழக்கங்கள்

      இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் இவை, நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியே தனது வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன. பெருகிவரும் காடுகளை ஆக்கிரமிக்கும் முறைகளால் இவ்வினம் அழிவை சந்தித்துக்கொண்டு வருகின்றது. இருப்பினும் இவ்வினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் அழிந்துவரும் உயிரினங்களுக்கான 'சிகப்பு பட்டியலில்' சேர்க்கப்படவில்லை.

வேட்டையாடும் முறை

இந்த இனமானது, மற்ற பாம்புக்ளைப் போலவே தனது இரையை அதன் மணத்தைக் கொண்டே அறிகின்றது. இதன் இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் செய்தியை வாயின் மேல் அண்ணத்தில் உள்ள யாக்கோப்சன் உறுப்பு என்னும் நுகர்பொறி உணர்கின்றது. தன் இரையின் மணத்தை உணர்ந்தபின் இரட்டை நாக்கை அசைத்து, இருகாது கேள்விபோல் (stereo) உணர்ந்து துல்லியமாய் இரை எங்குள்ளது என்று உணர்கின்றது இதன் நுண்ணிய பார்வைத்திறன், 300 அடிக்கு அப்பால் உள்ள இரையின் சிறு அசைவைக்கூட அறியும் திறன் கொண்டது. மற்ற பாம்புகளை போலவே இவற்றிற்கும் நான்கு புறமும் வாய்த்தசைகள் விரியும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் இவை முழு இரையையும் ஒரே முறையில் விழுங்கிவிடுகின்றன. மேலும் இதன் வாய்த்தசைகள், இதன் தலையை விட பெரியதாக விரியும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் நாள் முழுவதும் வேட்டையாடும் இவற்றை, இரவில் காண்பது அரிது.
இவை ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

தற்காப்பு முறைகள்

பொதுவாக இவ்வகை பாம்புகள் தனது இரையைத் தவிர மற்றவர்களை தாக்குவதில்லை. தனது வழியிலேயே செல்கின்றன. இதை தவிர்த்து எதிரிகள் இதன் வழியில் குறிக்கிடும் பொழுது, தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இவை தனது உடலை, தரையில் இருந்து பல அடி எழுந்து உயர்த்தி காட்டுகின்றன. பின் படம் எடுத்து காட்டுகின்றன. மேலும் 'ஸ்ஸ்ஸ்' என்று காற்றொலி எழுப்புகின்றன. தனது சக்தியை, எதிரிகளுக்கு காட்டும் பொருட்டே இவை இவ்வகையான செயல்களில் ஈடுபடுகின்றன. இதையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கும்பொழுதே, இவை அவற்றை தாக்கி அதன் உடலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன.

நஞ்சு


 
கருநாகத்தின் மண்டை ஓடு, பக்கவாட்டுத் தோற்றம்
கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது. இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் கோமா நிலைக்கு சென்று மரணத்தை தழுவிவிடுவான். மேலும் ஆசிய யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும்.இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது.
உண்மையில் இதன் நஞ்சானது குறைந்த அளவு நச்சு தன்மையே கொண்டதுதான். ஆனால் இவ்வகை கருநாகங்கள் ஒரு முறை எதிரியைக் கடிக்கும் பொழுது, ஏறத்தாழ 6 முதல் 7 மில்லி அளவு நஞ்சை அதன் உடலில் செலுத்தவல்லது. இதன் காரணமாகவே இதன் எதிரிகள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன.
இதன் நஞ்சை முறிக்க இதுவரை இரண்டு மருந்துகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கம் கண்டுபிடித்தது. மற்றது இந்திய மத்திய ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது. ஆனால் இவை இரண்டும் பரவலாக கிடைக்காத காரணத்தால், இதன் கடி பட்ட பலரும் இறந்து விடுகின்றனர்.

இனப்பெருக்கம்

இந்த இனம் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கின்றது. தாய் கருநாகமானது தனது நீள உடல் முழுவதையும் மலையடுக்கு போல வட்டமாக சுருட்டிக்கொண்டு அதன் உள்ளே முட்டைகளை இடுகின்றது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இடும். தாய் தான் இட்ட முட்டைகளை வேறு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க காய்ந்த இலைகளைக் குவித்து அதனுள் முட்டைகளை வைத்திருக்கும். பெரிய விலங்குகள் அருகில் வந்தாலொழிய இவை, அடைக்காப்பதை விட்டு விலகுவதில்லை. இவ்வினத்தின் இனச்சேர்க்கை சனவரியிலிருந்து மார்சு மாதம் வரை நடக்கும், பின் ஏப்ரலிலிருந்து மே மாதம் வரையில் பெண் முட்டைகளை இடும்.

படத்தொகுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக